டெல்லி முதல்வர் அதிஷியின் உரையைச் சிதைத்து, சீக்கிய குருக்களை அவர் அவமதித்ததாகத் தவறான வீடியோவைப் பகிர்ந்த புகாரில், டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா மீது பஞ்சாப் போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்.
சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இக்பால் சிங் என்பவர் அளித்த புகாரின் பேரில், ஜலந்தர் போலீஸார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். முன்னதாக, அதிஷி சட்டமன்றத்தில் பேசும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த கபில் மிஸ்ரா, அதில் அதிஷி சீக்கிய குருவான தேக் பகதூரை அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இருப்பினும், அந்த வீடியோ தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், அது தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைக்கப்பட்டது (Edited) உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இரு சமூகத்தினரிடையே மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கபில் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கபில் மிஸ்ரா, “இந்த எஃப்.ஐ.ஆர்-க்கு நான் பயப்படமாட்டேன். அதிஷி செய்த குற்றத்தை மறைக்க பஞ்சாப் போலீஸாரை அரவிந்த் கெஜ்ரிவால் ஏவிவிட்டுள்ளார். டெல்லி சட்டமன்றப் பதிவுகளில் அந்த வீடியோ அப்படியே உள்ளது. உலகமே அதைப் பார்த்திருக்கிறது. அதனால்தான் சபாநாயகர் அழைத்தும் சட்டமன்றத்திற்கு வர அதிஷிக்குத் தைரியம் இல்லை” என்று சாடியுள்ளார்.
இதே விவகாரத்தில், அதிஷியின் எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினர் பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக எம்.பி.க்கள் யோகேந்தர் சந்தோலியா, கமல்ஜீத் செஹ்ராவத் மற்றும் கைலாஷ் கெஹ்லோட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள முன்னாள் முதல்வர் அதிஷி கூறியிருப்பதாவது:”பாஜக பரப்பும் தகவல்கள் அனைத்தும் பொய். சட்டமன்றத்தில் தெருநாய்கள் தொல்லை குறித்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சியினரின் அமளியைச் சுட்டிக்காட்டி நான் பேசியதை, தொழில்நுட்ப வசதியுடன் மாற்றி பாஜகவினர் வெளியிட்டுள்ளனர். ‘நாய்களை மதிக்கவும்’ என்று நான் சொன்ன இடத்தில், ‘குரு தேக் பகதூர்’ பெயரைச் செருகி பாஜகவினர் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகின்றனர். சீக்கிய குருக்களை நான் ஒருபோதும் அவமதிக்க மாட்டேன்.”இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார். மேலும் சீக்கிய சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
