ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், படத்தின் கதாநாயகன் விஜய் இது குறித்து வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு முட்டுக்கட்டை போட்டு வரும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய தணிக்கைக் குழுவின் முக்கியப் பணியே படங்களைப் பார்த்துச் சான்றிதழ் வழங்குவதுதான். தணிக்கைக் குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் (4 பேர்) இப்படத்திற்கு ‘யு/ஏ’ (U/A) சான்றிதழ் வழங்கலாம் எனப் பரிந்துரைத்த போதிலும், ஒருவரின் புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வழக்கமாகப் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படுவது மரபு. ஆனால், இங்கே அந்த மரபு மீறப்பட்டுள்ளது. இதுபோன்ற கெடுபிடிகள் நீடித்தால் சினிமாத் துறையினர் எப்படித் தொழில் செய்ய முடியும்?
மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக விஜய்க்கு நிர்ப்பந்தம் கொடுத்து, அவரைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வளவு அநீதிகள் நடப்பதும், இது கருத்துரிமைக்கு எதிரானது என்பதும் தெரிந்திருந்தும் ‘ஜனநாயகன்’ (விஜய்) மௌனம் காப்பது வியப்பளிக்கிறது.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அவருக்காகவும், கருத்துச் சுதந்திரத்திற்காகவும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட கதாநாயகன் மௌனமாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. மத்திய அரசின் தூண்டுதலால் தான் தணிக்கைக் குழு நெருக்கடி கொடுக்கிறது என்று பகிரங்கமாகச் சொன்னால், தனக்குப் பின்விளைவுகள் ஏற்படுமோ என்று அவர் அஞ்சுகிறாரா? எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
