மும்பை மகாராஷ்டிராவின் நகரம் அல்ல; அது ஒரு சர்வதேச நகரம்” எனத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை பிரசாரத்தின் போது பேசியது மராட்டிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவ சேனா (யுபிடி) எம்.பி. சஞ்சய் ராவத், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மும்பையில் பாஜக மேயர் வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்: “மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் தேவேந்திர பட்நாவிஸ், மும்பை மாநகராட்சியில் பாஜக மேயர் அமைய வேண்டும். ஏனென்றால்… மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்.” என்றார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சு, மும்பை நகரின் தனித்துவத்தை மகாராஷ்டிர மாநில அடையாளத்திலிருந்து பிரித்துப் பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அண்ணாமலையின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாஜக-வின் நட்சத்திரப் பேச்சாளரான அண்ணாமலை, மகாராஷ்டிராவின் தலைநகர் குறித்து இவ்வாறு பேசுவது கண்டிக்கத்தக்கது. இதுதான் பாஜக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அண்ணாமலைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவரை மும்பையை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது.
இந்த விவகாரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் பட்நாவிஸ் ஆகியோர் மௌனம் காப்பது ஏன்? அவர்களின் சுயமரியாதை எங்கே போனது?” என அவர் கேள்வி எழுப்பினார். இந்த சர்ச்சை குறித்துப் பேசிய மகாராஷ்டிர பாஜக அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, “அண்ணாமலையின் கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். அவர் எந்த உள்நோக்கத்துடன் அப்படிக் கூறினார் என்பதைக் கண்டறிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மும்பை நகரின் உரிமை மற்றும் அடையாளம் தொடர்பான விவகாரம் எப்போதும் மராட்டிய அரசியலில் உணர்வுப்பூர்வமான ஒன்றாக இருப்பதால், அண்ணாமலையின் இந்தப் பேச்சு மாநகராட்சித் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது.
