கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி நீண்ட தூரத்திற்கு நீர்நிலை சதுப்பு நிலப்பகுதிகள் இருக்கிறது. பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்நிலையில் நாஞ்சலூரில் வசிக்கும் அப்துல் ரசித் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 4 மணிக்கு யாரோ அப்துல் ரஷீத்தின் வீட்டு கதவை தட்டியுள்ளனர்.

இதனால் கண்விழித்த அப்துல் கதவைத் திறந்து பார்த்தார். அப்போது வீட்டு வாசலில் படிக்கட்டில் ராட்சத முதலை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த முதலை கதவை தலையால் முட்டியது. அந்த சத்தம் தான் கதவை தட்டியது போல கேட்டுள்ளது. அப்துல் கூச்சலிட்டதும் திட்டிக்கிட்டு எழுந்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். இதற்கிடையே முதலையும் வேகமாக அங்கிருந்து சென்றது.

இது குறித்து அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் நாஞ்சலூர் கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் சுமார் 8 அடி நீளமும் 110 கிலோ எடையுள்ள அந்த முதலையை பிடித்தனர். பழைய கொள்ளிடம் ஆற்றில் இருந்து முதலை ஊருக்குள் நுழைந்தது தெரியவந்தது. பின்னர் அந்த முதலை வக்காரா மாறி நீர்த்தேக்கத்தில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.