கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் பகுதியில் ஆறுமுகம்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் குடோனும் அமைந்துள்ளது. அந்த குடோனில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கதிரவன்(39) என்பவர் 2 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

சரக்குகளை கொள்முதல் செய்வதற்காக ஆறுமுகம் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று வங்கியில் பணம் டெபாசிட் செய்து வந்தார். சமீபத்தில் தனது கடையில் ஊழியராக வேலை பார்த்த ராமதாசிடம் 28 ரூபாய் பணத்தை கொடுத்து வங்கியில் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ராமதாஸ் கார் டிரைவரான கதிரவனுடன் காரில் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்றுள்ளார்.

பின்னர் ராமதாஸ் பணத்தை காரில் வைத்து விட்டு வங்கிக்குள் சில நொடிகள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காருடன் கதிரவன் மாயமானது தெரியவந்தது. அவரது செல்ஃபோன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதுகுறித்து ராமதாஸ் ஆறுமுகத்திடம் கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு இடையே கார் ராமன்புதூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனால் ஆறுமுகம் போலீசாருடன் அந்த இடத்திற்கு சென்று காரை மீட்டார். இதனை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கதிரவன் 28 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது. அவர் கேரள மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்றனர்.