நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடானது கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகள் அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துதல், புதிய மாவட்ட செயலாளர்கள் நியமித்தல் போன்றவற்றை செய்து வருகிறார் விஜய் . சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொதுச் செயலாளர், அதிமுகவிலிருந்து வந்த சிடி நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர், நடிகர் ராஜ் மோகனுக்கு கட்சி கொள்கை பரப்பு செயலாளர் என முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டது.
இதற்கிடையில் விஜய் சென்னை நீலாங்கரையில் அவருடைய வீட்டில் பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திடீரென்று நேற்று சந்தித்து பேசினார் . இந்த சந்திப்பு மதியம் மூன்று மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை நடைபெற்றதாம். அப்போது தமிழக அரசியல் நிலவரம், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், எந்தெந்த கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் ?மக்களின் மனங்களுக்குள் வருவதற்கு என்னென்ன பிரச்சனை முன்னெடுக்க வேண்டும், என்று பல்வேறு அம்சங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் விவரித்ததாகவும் கூறப்படுகிறது.
விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பின்போது தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோரும் அங்கிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகளோடு அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இரண்டாம் நாளாக இன்றும் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலுக்காக விஜயின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி வீட்டுக்கு ஒரு ஓட்டு என்ற அடிப்படையில் வாக்குகளை கைப்பற்ற பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது
