கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 45 வயதான மயக்கவியல் நிபுணர் (Anesthetist) டாக்டர் கிரண் ஹொன்னாவர் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதே அறையில் அவரது 8 வயது மகன் நிஹித் என்பவனும் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் உலுக்கியுள்ளது.
கொலையுண்ட டாக்டர் கிரணின் மனைவியான டாக்டர் பிரியங்கா கட்டனஹள்ளி என்பவரும் ஒரு கண் மருத்துவ நிபுணர் (Ophthalmologist) ஆவார். சம்பவத்தன்று உறவினர்களும் நண்பர்களும் கிரணின் கைப்பேசிக்குத் தொடர்பு கொண்டபோது, அதை எடுத்த பிரியங்கா, “அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் அல்லது பணிக்குச் சென்றுள்ளார்” என மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த உறவினர்கள் உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் டாக்டர் கிரண் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். அவரது 8 வயது மகன் நிஹித் உடலெங்கும் கத்திக்குத்து காயங்களுடன், மரணத்தின் விளிம்பில் மூச்சு இழுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்துள்ளான். போலீசார் உடனடியாக அந்தச் சிறுவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்தக் கொடூரக் காட்சியின் நடுவே, போலீசார் உள்ளே நுழைந்து எடுத்த வீடியோவில் ஒரு அதிர்ச்சிகரமான காட்சி பதிவாகியுள்ளது. கணவன் ரத்த வெள்ளத்தில் சடலமாகவும், மகன் உயிருக்குப் போராடிக் கொண்டும் கிடந்த அதே அறையில், டாக்டர் பிரியங்கா எதைப் பற்றியும் கவலைப்படாமல் படுக்கையில் அசால்ட்டாகப் படுத்துக்கொண்டு மொபைல் போனை நோண்டிக் கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று வீட்டிற்குள் வெளிநபர்கள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. சம்பவத்தின்போது வீட்டிற்குள் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூவர் மட்டுமே இருந்துள்ளனர். இதனால் டாக்டர் பிரியங்கா மீதே போலீசாருக்கு முழுக் கொடூரச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவர்களெங்கும் ரத்தம் தெறிக்கத் தெறிக்க இந்த விபரீதக் கொலை எப்போது நடந்தது, இதற்கான உண்மையான பின்னணி மற்றும் குடும்பத் தகராறு என்ன என்பது குறித்துத் தடயவியல் துறையினரின் உதவியுடன் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். ஒரு பெண் டாக்டரே தனது கணவரைக் கொன்று, பெற்ற மகனையும் கொலை செய்ய முயன்றதாக எழுந்துள்ள இந்த விபரீதச் செய்தி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
