பள்ளிக்கூடங்கள் என்பது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக இருக்க வேண்டும் என்ற பொதுவிதியை உடைத்தெறிந்து, ஒட்டுமொத்த தேசத்தையுமே தலைகுனிய வைக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

சவாய் மாதோபூர் மாவட்டத்தின் லிவாலி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், தனது கைப்பைக்குள் இருந்த வெறும் ₹1000 பணம் காணாமல் போனதாகக் கூறி, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றிச் சோதனையிட்டதாகப் பள்ளியின் மூத்த இந்தி ஆசிரியை சரஸ்வதி மீனா என்பவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.

இந்த அநாகரிகமான செயலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள், தங்களது வீடுகளுக்குச் சென்று பெற்றோரிடம் கதறி அழுது விபரத்தைக் கூறவே, ஆத்திரமடைந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் பூட்டுப் போட்டு விஸ்வரூபப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ​இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்வித் துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி விபரங்களைச் சேகரித்தனர்.

ஆசிரியை சரஸ்வதி மீனா தன்னிடம் இருந்த பணம் தொலைந்ததை அடுத்து, மாணவிகள் மீது சந்தேகப்பட்டு இந்த விபரீத சோதனையை நடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் குடிமைப் பணிகள் விதிகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை சரஸ்வதி மீனாவை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று ஆசிரியை தரப்பில் மாணவிகளுக்குக் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும், இதற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோஜ் குமார் மீனாவும் உடந்தையாக இருந்து, உரிய நேரத்தில் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் மூடிமறைக்க முயன்றதும் அம்பலமாகியுள்ளது.

​இதனால், அலட்சியமாகச் செயல்பட்ட தலைமை ஆசிரியர் மனோஜ் குமார் மீனா மீதும் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கல்வித் துறை பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தன் மீது சுமத்தப்பட்ட இந்த அருவருப்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆசிரியை சரஸ்வதி மீனா, “பணம் தொலைந்த விவகாரத்தில் மாணவிகளிடம் விசாரணை மட்டுமே நடத்தினேன்;

ஆடைகளைக் களையச் சொல்லிச் சோதனையிடவில்லை, என் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை” என்று தற்காப்பு வாதத்தை முன்வைத்துள்ளார். எனினும், ஒரு பெண் ஆசிரியையே சக மாணவிகளை இப்படிப்பட்ட இழிவான சோதனைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இந்த விவகாரம் குறித்துக் கல்வித் துறை தற்போது மிகத் தீவிரமான உயர்மட்டத் துறை ரீதியான விசாரணையைத் தொடங்கியுள்ளது.