உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணைக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவமும், அவர் எழுதி வைத்த 28 பக்க மரண சாசனமும் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜைச் சேர்ந்த ஷிபாலி கேசவாணி என்ற இளம்பெண்ணுக்கும், கோபால் கேசரி என்பவருக்கும் கடந்த மே 7-ம் தேதி மிக விமர்சையாக திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணையாக 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், சொகுசு காரும் கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஷிபாலியைத் தொடர்ந்து வற்புறுத்தி, மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யத் தொடங்கியுள்ளனர்.
வரதட்சணைப் பேய்களின் இந்த பேராசையால், ஷிபாலி தனது புகுந்த வீட்டில் அணு அணுவாக சித்திரவதைகளை அனுபவித்துள்ளார். கணவர் கோபால் கேசரி தினமும் மதுபோதையில் வந்து ஷிபாலியைக் கட்டையால் அடித்துத் துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல், மாமியார் குடும்பத்தினர் அவருக்குச் சாப்பாடு கூட கொடுக்காமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இந்த நரக வேதனையைத் தாங்க முடியாமல், கடந்த ஜூன் மாத இறுதியில் ஷிபாலி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தஞ்சம் புகுந்தார். இந்த நிலையில், ஜூலை 13 அன்று கணவர் வீட்டார் மீண்டும் அவரை அழைத்துச் செல்ல வருவதாகக் கூறியுள்ளனர். மீண்டும் அந்த நரக வாழ்க்கைக்குள் செல்ல பயந்த ஷிபாலி, வேறு வழியின்றி தனது பெற்றோர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக, ஷிபாலி தனது திருமண வாழ்க்கையில் அனுபவித்த அனைத்து அவலங்களையும், மாமியார் வீட்டின் சுயரூபத்தையும் 28 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதத்தில் கண்ணீர் மல்க விரிவாக எழுதி வைத்துள்ளார்.
இந்த நெஞ்சை உலுக்கும் தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றியுள்ள போலீசார், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வரதட்சணைக் கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் கணவர் கோபால் கேசரி, மாமனார், மாமியார் மற்றும் மைத்துனர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இரண்டே மாதங்களில் ஒரு பெண்ணின் வாழ்க்கை வரதட்சணையால் பறிபோன இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
