கிரிக்கெட் மைதானத்தில் ரன்களைக் குவிக்க முடியாமல் திணறி வரும் விராட் கோலி, தற்போது மைதானத்திற்கு வெளியே ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆனால், இந்தப் போட்டியில் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றிய கோலி, இப்போது தனது மெய்க்காப்பாளரின் அதிரடி அக்கிரமத்தால் ஒட்டுமொத்த மீடியாக்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார். இந்திய அணி வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, அங்கு முறைப்படி அனுமதி பெற்று செய்தி சேகரிக்கச் சென்ற இந்தியப் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள், பேருந்தின் அருகே நின்று வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த விராட் கோலியின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர் பத்திரிகையாளர்களிடம் மிகக் கொடூரமான வார்த்தைகளால் மிரட்டியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மூத்த பத்திரிகையாளர் சுபயன் சக்ரவர்த்தி, “அனுமதி பெற்ற அடையாள அட்டையைக் காட்டிய பிறகும், ‘அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, இங்கே இருந்து போ’ என்று கூறி அந்த மெய்க்காப்பாளர் பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தினார்” எனத் தெரிவித்துள்ளார். இதுமட்டுமன்றி, அங்கிருந்த ரசிகர் ஒருவரின் மொபைல் போனைப் பறித்து அந்த பாடிகார்ட் உடைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பொதுவாக, இந்திய அணி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும்போது ஒட்டுமொத்த வீரர்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் பிசிசிஐ தான் கவனித்துக் கொள்கிறது.

“>

எப்போதும் அதிகாரப்பூர்வ பாதுகாவலர்கள் இருக்கும்போது, விராட் கோலிக்கு மட்டும் ஏன் தனியாக ஒரு பர்சனல் பாடிகார்ட்? பிசிசிஐ-யின் விதிமுறைகள் விராட் கோலிக்கு மட்டும் விதிவிலக்கா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். மைதானத்தில் ஃபார்ம் அவுட் ஆகிக் இருக்கும் கோலிக்கு, அவரது மெய்க்காப்பாளரின் இந்த அநாகரிக நடத்தை இங்கிலாந்து மண்ணில் புதிய தலைவலியை ஏற்படுத்தியது.