வாடகை ஒப்பந்தங்களில் பொதுவாக ‘லாக்-இன் காலம்’ என்றொரு விதி இருக்கும். உதாரணமாக, 6 மாதங்கள் லாக்-இன் காலம் என்று இருந்தால், அதற்குள் நீங்கள் வீட்டை காலி செய்ய முடியாது. ஒருவேளை அவசர வேலை காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அந்த காலத்திற்குள் வீட்டை காலி செய்ய நேரிட்டால், நீங்கள் வீட்டில் வசிக்காவிட்டாலும் அந்த குறிப்பிட்ட மாதங்களுக்கான முழு வாடகையையும் உரிமையாளருக்கு அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.

எனவே, லாக்-இன் காலம் எவ்வளவு, அவசர காலத்தில் வீட்டை காலி செய்ய எத்தனை மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாகப் பார்த்து சரிசெய்ய வேண்டும். வீட்டில் ஏற்படும் அன்றாடப் பழுதுகளை யார் சரிசெய்வது என்பதில் எப்போதுமே வாடகைதாரருக்கும் உரிமையாளருக்கும் இடையே குழப்பம் நீடிக்கும். ஒப்பந்தத்தில் இதுபற்றி தெளிவாக இல்லை என்றால், குழாய் கசிவு, மின்சாரக் கோளாறு போன்ற சிறிய பழுதுகளுக்குக் கூட வாடகைதாரரே பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

எனவே, கட்டடத்தின் சுவர்களில் ஏற்படும் விரிசல் அல்லது கூரை ஒழுகுதல் போன்ற பெரிய கட்டமைப்புப் பழுதுகளை  உரிமையாளர்தான் சரிசெய்ய வேண்டும் என்பதையும், அன்றாடச் சிறிய பழுதுகளை மட்டுமே வாடகைதாரர் ஏற்பார் என்பதையும் ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

வீட்டை காலி செய்யும்போது முன்தொகையை வாங்குவதில் தான் அதிக சிக்கல்கள் எழுகின்றன. பல வீட்டு உரிமையாளர்கள் வீட்டை காலி செய்யும்போது பெயிண்டிங் சார்ஜ் அல்லது தேய்மானக் கட்டணம் என்ற பெயரில் பெரிய தொகையைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

இயற்கையாக ஏற்படும் தேய்மானங்களுக்கு வாடகைதாரர் பொறுப்பல்ல. எனவே, வீட்டை காலி செய்த எத்தனை நாட்களுக்குள் முன்பணம் திரும்பத் தரப்படும் என்பதையும், நியாயமற்ற காரணங்களுக்காகப் பணம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்பதையும் ஒப்பந்தத்தில் முன்கூட்டியே தெளிவாகச் சேர்த்துக்கொள்வது உங்கள் பணத்தைப் பாதுகாக்கும்.