அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராசிகுல். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஜெஸ்வீனா (30) மற்றும் 4 வயதான மகன் ஜோஹிருலுடன் கேரளாவின் கண்ணூரில் வாழ்ந்து வந்தார். இதில் ஜெஸ்வீனா கர்ப்பமாக இருந்தார். இதனையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் மாலோடு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு ராசிகுல் குடிபெயர்ந்தார். இந்த நிலையில், ஜெஸ்வீனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிலேயே குடும்பத்தினருடன் பிரசவம் பார்த்துள்ளார்.
பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்திற்குப் பிறகு, ஜெஸ்வீனா மயக்கமடைய, அவரை அவசரமாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், ஜெஸ்வீனா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது கணவர் ராசிகுல் மற்றும் குடும்பத்தினர் தலைமறைவானார்கள். புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் ஜோஹிருலை தவித்து விட்டுசென்றனர்.
இந்த தகவலை அறிந்த போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். ஜெஸ்வீனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிறந்த குழந்தையை கண்ணூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜோஹிருல் எனும் 4 வயது சிறுவனை சைல்டு லைன் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் வீட்டில் பிரசவம் நடத்த முயன்றதால் உயிரிழந்த ஜெஸ்வீனாவின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான ராசிகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.
