குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள பிரபலமான யுனைடெட் வே கர்பா மைதானத்தில் நடைபெற்ற பக்தி மற்றும் நடன இரவில், ஒரு வெளிநாட்டு இந்திய தம்பதி அரங்கில் நடனமாடியபோது முத்தமிடும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த சம்பவம் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) இரவு கலாலி மைதானத்தில் நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் நடனமாடும் போது, கணவர் தனது மனைவியை தூக்கி முத்தமிடும் காட்சி அங்கிருந்த பார்வையாளர்களால் வீடியோவாக எடுக்கப்பட்டது.

 

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதுடன், பலரும் அந்த செயலை விமர்சித்து, மாதாஜியின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனித நிகழ்வின் புனிதத்துக்கு அவமரியாதை எனக் கண்டித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அட்லாட்ரா காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டது. அதன் பின்னர், வதோதரா மஞ்சல்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதிக் படேல் மற்றும் அவரது மனைவி ஆனந்தா ஆகிய இருவரும் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 16 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள் என்றும், சட்டப்படி திருமணமானவர்கள் என்றும், இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காவல் நிலையத்தில் இருவரும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரி, பிறகு விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் ஆஸ்திரேலியா திரும்பினர்.