அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டம் பார்பருவா பகுதியில் வசித்து வந்த தொழிலதிபர் உத்தம் கோகோய் (வயது 52), கடந்த ஜூலை 25ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தொடக்கத்தில் இது கொள்ளை சம்பவமாகவே போலீசாருக்கு புகாரளிக்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு இதில் பல சந்தேகங்கள் எழுந்தன. உடனடியாக அவருடைய குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்தபோது திடுக்கிடும் உண்மை வெளிவந்தது போலீசாரை அதிர்ச்சி அடையவைத்தது.

போலீசாரின் விசாரணையில், இந்த கொலை சம்பவம் திட்டமிட்டு நடைபெற்றது என்பதை உறுதி செய்துள்ளனர். இதில் உத்தம் கோகோயின் மனைவி பாபி கோகோய் மற்றும் 16 வயது மகள் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். மகள், திப்ஜோதி புராகோஹைன் (வயது 21) என்ற இளைஞருடன் காதலிலிருந்ததாகவும், தந்தை இந்த உறவை எதிர்த்ததாலே இந்த கொலைக்கு திட்டமிடப்பட்டது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். திப்ஜோதி, மற்றொரு நண்பர் மற்றும் ஒரு மைனர் சிறுவனும் இந்த கொலையில் பங்கேற்றுள்ளனர்.

தந்தையை கொலை செய்ய, திப்ஜோதி மற்றும் மற்ற குற்றவாளிகளுக்கு பணம் மற்றும் நகைகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தை கொள்ளை நடவடிக்கையாக காட்டுவதற்காக வீட்டில் சில பொருட்கள் மனைவி மற்றும் மகள் இணைந்து அங்கும் இங்கும் வீசி அதாவது திருட்டு நடப்பதுபோல் செய்துள்ளனர். ஆனால் தடயவியல் சான்றுகள் மற்றும் வாக்குமூல முரண்பாடுகள் வழியாக போலீசார் உண்மையை கண்டுபிடித்தனர். கைதான நான்கு பேரும் தற்போது போலீசார் வசம் உள்ளனர்.

இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கோபத்தில் பரபரப்பாக , குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.