குடும்பத்தில் அவசரநிலை ஏற்பட்டதால், ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஊழியரின் ஒரு நாள் சம்பளத்தைக் கழிக்குமாறு மேலாளர் உத்தரவிட்ட சம்பவம் ஒன்று ரெடிட் தளத்தில் வெளியாகி வைரலாகி, கார்ப்பரேட் உலகின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கணக்காளராகப் பணிபுரியும் அந்த ஊழியரின் பாட்டி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், இரவு 9 மணிக்கு இருந்த ஆன்லைன் கூட்டத்தை அவர் தவறவிட்டுள்ளார். இதுகுறித்து சக ஊழியரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் நிர்வாகத்திடம் கூற மறந்துவிட்டதால், “கூட்டத்திற்கு வராததால், ஒரு நாள் சம்பளத்தைக் கழிக்கச் சொல்லி இயக்குநர் மனிதவளத் துறையிடம் (HR) கேட்டார்” என்று ஊழியர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் இருந்தபோதும் இயக்குநர் தொலைபேசியில் ஊழியரை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளக் குறைப்பு விவகாரம் ஒருபுறம் இருக்க, பாட்டி மருத்துவமனையில் இருந்த பத்து நாட்களுக்குப் பிறகு, அதே வாடிக்கையாளருக்காக அதிகாலை 3:30 மணி வரை சுமார் 16.5 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்ததாகவும் அந்த ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடுமையான பணிச்சுமை குறித்து அவர் கேள்வி எழுப்பியபோது, மனிதவளத் துறையோ, “இப்படி எல்லாம் கோபப்படக் கூடாது, சிலசமயம் இது நடப்பதுதான் – இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் அல்லவா” என்று அலட்சியமாகப் பதிலளித்ததாக அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரமான சூழ்நிலையைப் படித்த நெட்டிசன்கள் பலரும் கொதிப்படைந்து, “அவர்கள் கொடுத்த கூடுதல் நேரத்திற்குப் பணம் கொடுக்கிறார்களா என்று கேளுங்கள், இல்லையென்றால் சம்பளத்தைக் குறைக்க அவர்களுக்கு உரிமை இல்லை” என்றும், “அடுத்த வேலைக்குத் தயாராகும் வரை நீங்கள் அமைதியாக உங்கள் வழக்கமான ஷிஃப்ட்டில் மட்டும் வேலை செய்யுங்கள்” என்றும் அந்த ஊழியருக்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
