திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார்‌ (31). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் வினோத் தன்னுடைய அக்கா மற்றும் அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருடைய தாயும் அக்காவும் சமையலறையில் இருந்தனர்.

அப்போது திடீரென 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வினோத்தை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த வினோத் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வினோத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.