பல்கலைக்கழகப் படிப்பை முடித்த கையோடு கார்ப்பரேட் வேலைக்குச் செல்லாமல், தனது தந்தையின் பாரம்பரியத் தொழிலான பாம்பு வளர்ப்பைத் கையில் எடுத்து, இன்று ஆண்டுக்கு பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார் சீனாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்.
தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள குயிலின் நகரைச் சேர்ந்தவர் ‘கின்’ ( 29). இவர் 1995-ஆம் ஆண்டு பிறந்தவர். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, இரண்டு ஆண்டுகள் வெளியூரில் பணிபுரிந்த கின், தனது தந்தையின் பாம்பு வளர்ப்பு தொழிலுக்கு உதவ மீண்டும் தனது கிராமத்திற்கே திரும்பினார்.
ஆரம்பத்தில் இந்தத் தொழில் மிகவும் ஆபத்தானது என்று அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், தந்தையினால் தனியாகக் கையாள முடியவில்லை. இதையடுத்து கின் முழுநேரமாக இத்தொழிலில் இறங்கினார்.
தற்போது கின் தனது பண்ணையில் சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து வருகிறார். இதில் 50,000-க்கும் மேற்பட்டவை அதீத விஷம் கொண்ட ‘பிட் வைப்பர்’ (Pit Viper) ரகத்தைச் சேர்ந்தவை. மீதமுள்ள 10,000 பாம்புகள் நல்ல பாம்புகள் (Cobra) ஆகும். பாம்புகளின் விஷம், பித்தப்பை, எண்ணெய் மற்றும் உலர்ந்த பாம்புகள் ஆகியவை மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் பாரம்பரிய மருந்து தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பாம்புகளின் விஷத்தின் தரத்தைப் பொறுத்து ஒரு கிராம் 6 டாலர் முதல் 30 டாலர் வரை விற்பனை செய்யப்படுகிறது. கறியின் பயன்பாட்டிற்காகவும் பாம்புகள் விற்கப்படுகின்றன. தொழிலாளர் ஊதியம் மற்றும் இதர செலவுகள் போக, இத்தொழில் மூலம் இவருக்கு ஆண்டுக்கு சுமார் 1,46,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.2 கோடி) லாபமாகக் கிடைக்கிறது. சராசரியாக மாதம் ₹11 லட்சம் வரை கின் வருமானம் ஈட்டுகிறார்.
பாம்பு பிடிப்பது மற்றும் பராமரிப்பது குறித்து சமூக வலைதளங்களில் ‘The Girl Who Collects Snake Venom’ என்ற பெயரில் வீடியோக்களையும் கின் பகிர்ந்து வருகிறார். அதில் பாம்பு கடித்தால் ஏற்படும் வலி குறித்து அவர் கூறியதாவது, “பாம்பு வளர்ப்பவர்கள் தங்களுக்குப் பயமில்லை என்று சொன்னால், அவர்களுக்கு இன்னும் பாம்பு கடிக்கவில்லை என்றுதான் அர்த்தம். குறிப்பாக ‘பிட் வைப்பர்’ கடித்தால் ஏற்படும் வலி என்பது மரணத்திற்கு இணையானது. அந்த வலி ஒரு வருடம் அல்லது வாழ்நாள் முழுவதும் உங்கள் நினைவில் இருக்கும். கை விரலில் கடித்தால் அதன் வலி தோள் வரை பரவி, உடலின் பாதியையே செயலிழக்கச் செய்யும் என்றார். மேலும் எவ்வளவு சவால்கள் இருந்தாலும், குடும்பத் தொழிலை நவீனமயமாக்கி சாதித்து வரும் கின், சீன இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
