தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தவெக அரசுக்கு அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகளுக்குத் தடையற்ற 24 மணி நேர மும்முனை மின்சாரம் (3-Phase Power) வழங்கப்பட வேண்டும் என்பதை மிக முக்கியமாக வலியுறுத்தியுள்ளார்.

​தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதன் காரணமாக, பயிர்களுக்கு உரிய நேரத்தில் நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “விவசாயிகளுக்கு 18 மணி நேரத் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்” என்று தவெக அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பை எப்படி நம்புவது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி வருவதாகவும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் அறிவிப்புகள் வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல், களத்தில் விவசாயிகளுக்குத் தடையற்ற மின்சாரம் கிடைப்பதையும், பயிர்க்கடன் தள்ளுபடியையும் முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்ற இந்த அறிக்கை அரசியல் மற்றும் விவசாய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.