அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த பிறகு, “விரைவில் நான் தவெகவில் இணையப் போகிறேன்” என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இன்னும் ஒரு சில நாட்களில் அதிமுகவைச் சேர்ந்த தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் சிலர் தவெகவில் இணையப் போவது உறுதி என்று கூறி அரசியல் வட்டாரத்தில் அணுகுண்டை வீசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் மீது இருக்கும் அதிருப்தி காரணமாக, விரைவில் அனைவரும் அவரை விட்டுவிட்டு வெளியேறி விடுவார்கள் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

​விஜய்யின் தவெக கட்சிக்குள் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் இணையப் போகிறார்கள் என்ற இந்தத் தகவல், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ.க்களே தவெகவுக்குத் தாவப் போகிறார்கள் என்று புகழேந்தி கொளுத்திப் போட்டுள்ள நெருப்பு, எடப்பாடி தரப்புக்குக் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி சந்திப்பு மற்றும் பேட்டி தொடர்பான செய்திகள் தற்போது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி, அரசியல் விமர்சகர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.