தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) விவசாயிகளிடம் முறைகேடாகப் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் கூட்டுறவுத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, கொள்முதல் நிலையங்களில் நிலவும் இடைத்தரகர் தலையீட்டைத் தடுக்க அங்கு உடனடியாகக் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட வேண்டும் என்றும், விவசாயிகள் ஆன்லைன் மூலம் நேரடியாகப் பதிவு செய்து டோக்கன் பெறும் எளிய நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கடந்த 2025 செப்டம்பரிலேயே இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தங்களுக்கு அப்படி ஒரு புகாரே வரவில்லை என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மழுப்பலாகப் பதிலளிக்கப்பட்டது.

இந்தத் தீவிரக் குற்றச்சாட்டைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், மனுதாரரின் புதிய கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, கூட்டுறவுத் துறை செயலாளர், நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குநர் ஆகியோர் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உரியப் பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அதிரடி கெடு விதித்துள்ளது.