ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர், காபூலில் இருந்து டில்லி வந்த விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு சுமார் 94 நிமிடங்கள் பயணம் செய்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காம் ஏர் நிறுவனத்தின் விமானம், கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமான ஊழியர்கள் லேண்டிங் கியரில் இருந்து ஒரு சிறுவனை கண்டுப்பிடித்தனர்.

விசாரணையில், அந்த சிறுவன் வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரைச் சேர்ந்தவர் என்பதும், விமான நிலையத்தின் பாதுகாப்பு பகுதிகளை மீறி, யாருக்கும் தெரியாமல் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.

பாதுகாப்பு நடைமுறைகள் மீறப்பட்ட இந்த நிகழ்வைச் சேர்ந்த வீடியோவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சிறுவன், “ஒரு ஆர்வத்தில் இந்த செயலை செய்துவிட்டேன்” என்று கூறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுவனை விமான ஊழியர்கள் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையிடம் (CISF) ஒப்படைத்தனர். மாலை 12.30 மணிக்கு டில்லியில் இருந்து புறப்பட்ட அதே விமானத்தில் அந்த சிறுவனை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சிறுவன் வயதில் சிறார் என்பதால் சட்ட ரீதியாக வழக்குப் பதிவு செய்ய முடியாது எனவும், இது ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிக்கொணர்கிறது எனவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.