கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே உள்ள கலயநாடு பகுதியில் கூலித்தொழிலாளி ஐசக் மேத்யூ (44), தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறைத் தொடர்ந்து, வீட்டுக்குள் நுழைந்து அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐசக் மேத்யூவின் மனைவி ஷாலினி (39), ஒரு பள்ளியில் வேலை செய்துள்ளார். தம்பதிக்கு 16 மற்றும் 11 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குடும்ப தகராறால் பாதிக்கப்பட்ட ஷாலினி, தனது பெற்றோருடன் தங்கி வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 6 மணியளவில் ஐசக், மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர், வீட்டுக்குள் நுழைந்து, மகன்களின் கண் முன்னே ஷாலினியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். சம்பவ இடத்திலேயே ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார். அவரை பார்த்தும் கண்ணீரில் அழுத இரு மகன்களையும் கண்டுகொள்ளாமல், ஐசக் அங்கிருந்து தப்பி சென்றார்.

பின்னர் அவர் தனது முகநூலில் வீடியோ ஒன்றை நேரலையாக வெளியிட்டு, “நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமும் நகைகளும் வீணாகிப் போனது. என் மகன்களில் ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், என் மனைவி ஆடம்பர வாழ்க்கையை விரும்பி தாய் வீட்டில் இருந்தார். எனவே தான் அவர் வாழ தேவையில்லை என்பதற்காகவே கொலை செய்தேன்” என்று கூறினார்.

இதையடுத்து, காலை 9 மணியளவில் ஐசக் நேராக காவல் நிலையத்தில் சென்று சரணடைந்து, கொலை செய்தது பற்றி ஒப்புக்கொண்டார். போலீசார் உடனே ஷாலினியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஐசக்கை கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட ஷாலினி, தி.மு.க. கொல்லம் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.