அமூர் ஃபால்கன் (Amur Falcon) எனப்படும் சிறிய வகை பருந்துகளின் ஒரு குழு, தங்கள் நம்ப முடியாத பயணத்தால் விஞ்ஞானிகளை வியக்க வைத்துள்ளது. பொதுவாகப் பறவைகள் 100, 500 அல்லது 1000 கி.மீ. தூரம் பறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வெறும் 150 கிராம் எடையுள்ள ஒரு பருந்து 6000 கி.மீட்டருக்கும் அதிகமான தூரத்தை இடைவிடாமல் பறந்து சாதனை செய்துள்ளது. மணிப்பூரின் காடுகளில் இருந்து புறப்பட்ட இந்தப் பருந்து, ஒரு வாரத்திற்கும் குறைவான நேரத்தில் கென்யாவை அடைந்தது.

இதுமட்டுமின்றி, அதனுடன் பயணித்த மற்ற இரண்டு பருந்துகளும் முறையே 5600 கி.மீ மற்றும் 5100 கி.மீ தூரத்தை கடந்தன.இவற்றில், அப்பாபாங் என்ற பெயரிடப்பட்ட ஆரஞ்சு நிறக் குறியீடு கொண்ட பருந்து, ஆறு நாட்கள் மற்றும் எட்டு மணி நேரத்தில் மொத்தம் 6100 கி.மீ பயணித்து குழுவில் முன்னிலை வகித்தது. இது வடகிழக்கு இந்தியாவில் இருந்து புறப்பட்டு, தீபகற்ப இந்தியா, அரபிக் கடல் மற்றும் ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகளைத் தாண்டி கென்யாவை அடைந்தது.

அலாங் என்ற மஞ்சள் நிறக் குறியீடு கொண்ட இரண்டாவது பருந்து, ஆறு நாட்கள் மற்றும் 14 மணி நேரத்தில் 5600 கி.மீ தூரத்தை நிறைவு செய்தது, எனினும் இது தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் சிறிய ஓய்வு எடுத்தது. ஆஹூ என்ற சிவப்பு நிறக் குறியீடு கொண்ட மூன்றாவது பருந்து, ஐந்து நாட்கள் மற்றும் 14 மணி நேரத்தில் 5100 கி.மீ பயணித்து சோமாலியாவின் வடக்கு பகுதியில் தங்கி உள்ளது. இவ்வளவு சிறிய பறவை இடைவிடாமல் இவ்வளவு நீண்ட தூரம் பயணிப்பது இதுவே முதல் முறை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.