கிருஷ்ணகிரி ஓசூர் வானவில் நகர் பகுதியில் கடந்த 3-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் (32) மரணம் தொடர்பான விசாரணையில், தினமும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்து வருகின்றன. இந்த வழக்கில் அவரது கள்ளக்காதலி மஞ்சுளா (35) உள்பட 10 பேர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாரசந்திரத்தைச் சேர்ந்த ஹரீஷ், டிரைவராக பணியாற்றியவர். ரியல் எஸ்டேட் மற்றும் வட்டி வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் வானவில் நகர் பகுதியில் அவர் கூலிப்படையினர் தாக்குதலுக்கு ஆளாகி கொல்லப்பட்டார்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட மஞ்சுளா முன்பு விபசார தொழிலில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. பல இளம்பெண்களை வைத்து தொழில் செய்த அவர், ஹரீஷுடன் பழகி நெருங்கிய உறவில் ஈடுபட்டிருந்தார். கணவரை பிரிந்த நிலையில், ஹரீஷை பாதுகாவலராகவும் துணையாகவும் வைத்திருந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

மஞ்சுளா வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கலும் செய்துள்ளார். ரூ.100-க்கு ரூ.2 வட்டி எடுத்து, ரூ.3 வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால், கையில் பணம் சுலபமாக இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், ஹரீஷ் தனது கடன்களைச் செலுத்த வேண்டும் எனக் கூறி மஞ்சுளாவிடமிருந்து ரூ.80 லட்சம் வரை பெறப்பட்டதாகவும், பின்னர் இது இருவருக்கும் இடையே பிரச்சினையாக மாறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் வாடிக்கையாளராக வந்த மோனீஷுடன் மஞ்சுளா நட்பாக பழகியதை ஹரீஷ் கண்டித்து தகராறு ஏற்பட்டது. கடந்த ஆண்டு மஞ்சுளா விபசார வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்ததும், உறவில் பிளவு அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார் என மஞ்சுளா கூறி, மோனீஷின் உதவியுடன் ஹரீஷை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தார். ரூ.10 லட்சத்திற்கு பேரம் பேசி, அதில் ரூ.4.5 லட்சம் அட்வான்சாக வழங்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

கூலிப்படையினர் ஹரீஷை கொன்றபின், அவரது புகைப்படத்தை மோனீஷ் மூலம் மஞ்சுளாவிற்கு அனுப்பி உறுதிப்படுத்தியதும், மறுநாள் மீதித் தொகையை வழங்கச் சென்றபோது போலீசார் மஞ்சுளாவை கைது செய்தனர். இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சென்னத்தூர் ரியல் எஸ்டேட் அதிபர் முரளி தற்போது தலைமறைவாகி உள்ளார். கூலிப்படையை ஏற்பாடு செய்தது, ஹரீஷின் அசைவுகளை கண்காணித்து தகவல் வழங்கியது உள்ளிட்ட பணிகளில் அவர் முக்கிய பங்குவகித்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மஞ்சுளா மற்றும் கூலிப்படையை சேர்ந்த 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் விசாரணை தொடரும் நிலையில், மேலும் பல அதிர்ச்சிகரமான விவரங்கள் வெளிப்படும் வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.