கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், ரியல் எஸ்டேட் மற்றும் கந்துவட்டித் தொழில் செய்து வந்தவருமான 32 வயதான ஹரீஷ் என்பவர் கடந்த 3-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது கள்ளக்காதலியான 35 வயது மஞ்சுளா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஹரீஷ் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபசாரத் தொழிலும், கந்துவட்டித் தொழிலும் செய்து வந்த மஞ்சுளா, கணவரைப் பிரிந்த பிறகு தனக்குப் பாதுகாவலராக ஹரீஷை வைத்துக்கொண்டார்.

​மஞ்சுளாவிடம் பணம் சரளமாகக் புழங்குவதைக் கண்ட ஹரீஷ், தனக்கிருந்த கடன்களை அடைக்க அவரிடமிருந்து சுமார் ரூ. 80 லட்சம் வரை பறித்துள்ளார். மேலும், மஞ்சுளாவிடம் வாடிக்கையாளராக வந்த மோனீஷ் என்பவருடன் அவர் பேசுவதையும் ஹரீஷ் கண்டித்துள்ளார். ஹரீஷின் பணத் தொல்லை மற்றும் கொடுமையால் ஆத்திரமடைந்த மஞ்சுளா, மோனீஷின் உதவியுடன் ஹரீஷைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

கூலிப்படையை ஏற்பாடு செய்ய ரூ. 10 லட்சம் பேரம் பேசி, அட்வான்ஸாக ரூ. 4.5 லட்சம் கொடுத்து ஹரீஷைக் கொலை செய்து உறுதி செய்துள்ளார். இந்தக் கொலை வழக்கில் மஞ்சுளா, மோனீஷ் மற்றும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூலிப்படையை ஏற்பாடு செய்ய உதவிய சென்னத்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முரளி என்பவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.