சென்னை மேற்கு தாம்பரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில், ‘நீட்’ தேர்வுக்காக தயார் செய்து வந்த ராமேஸ்வரம் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆருண் பாஷா (22). பார்மசி டிப்ளமோ முடித்த இவர், ‘நீட்’ தேர்வு தயாரிப்பிற்காக தனது அண்ணனுடன் மேற்கு தாம்பரம், கோகுல் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார்.
நேற்று அதிகாலை 2 மணி அளவில், தனது காதலியுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்த ஆருண் பாஷா, திடீரென மனஉளைச்சலுக்கு ஆளாகி, கை மணிக்கட்டு பகுதியை கத்தரிக்கோல் போன்ற ஆயுதத்தால் அறுத்துகொண்டதாக போலீசார் கூறினர். பின்னர், அவர் தங்கி இருந்த 3-வது மாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே குதித்ததாகவும் தெரிவித்தனர்.
இதில் கடுமையான காயங்களுக்கு ஆளான அவரை அண்ணன் உடனடியாக மீட்டு தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
தகவல் அறிந்த தாம்பரம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், ஆருண் பாஷா கோவையில் உள்ள தனியார் கல்வி மையத்தில் பயின்றபோது ஒரு இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், கடந்த ஒரு வாரமாக அடிக்கடி தகராறு செய்து கொண்டதாகவும், சம்பவத்தன்று இரவு முழுவதும் செல்போனில் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆருண்பாஷா, தற்கொலைக்கு முனைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த குடியிருப்பு பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
