கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி விடுதியில், மாணவர் ஒருவர் சக மாணவர்கள் மீது இரும்புக் கம்பியால் நடத்திய கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் இரவு உணவு முடித்துவிட்டு மாணவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் ஏழு மாணவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலை நடத்திய மாணவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. சுமன் பென்னேகர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலா அல்லது மன ரீதியான காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அமைதி நிலவ வேண்டிய கல்வி நிறுவன விடுதியில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
