கடந்த சில மாதங்களாக உலக நாடுகளைப் பதற்றத்தில் வைத்திருந்த அமெரிக்கா – ஈரான் இடையேயான நேரடிப் போர் சூழல், தற்போது ஒரு முக்கிய உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வரவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான அமைதி ஒப்பந்தம் தயாராகிவிட்டதாகவும், உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ மீண்டும் திறக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்கா, ஈரான் மற்றும் சில நட்பு நாடுகளுக்கு இடையேயான ஒரு பெரிய ஒப்பந்தம் பெருமளவில் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இறுதி கட்ட விவரங்கள் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன, இது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மூடப்பட்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இரு நாடுகளும் கையெழுத்திட உள்ள இந்த தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 14 முக்கிய புள்ளிகள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அதில் முக்கியமானவை, ஈரான் மற்றும் லெபனான் (ஹிஸ்பொல்லா) உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர் உடனடியாக நிறுத்தப்படும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நேரடிப் போர் சூழல் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி படிப்படியாகத் திறக்கப்படும். ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகை தளர்த்தப்படும். வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பல பில்லியன் டாலர் சொத்துக்கள் விடுவிக்கப்படும். இந்த தற்காலிக ஒப்பந்தத்தை அடுத்து, அடுத்த 30 முதல் 60 நாட்களுக்குள் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்த மிகக் கடினமான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தைப் பெரிய வெற்றியாகக் கொண்டாடினாலும், ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ‘பார்ஸ் நியூஸ் இந்தத் தகவலுக்குச் சற்று முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஒப்புக்கொண்டாலும், அதன் முழுக் கட்டுப்பாடு தொடர்ந்து ஈரானின் வசமே இருக்கும் என்றும், டிரம்ப் கூறுவது போல அது முற்றிலும் ‘தடையற்ற சர்வதேசப் பாதையாக’ மாறாது என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த நிலைக்கு மட்டுமே கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று ஈரான் தரப்பு கூறுகிறது.
அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தப் பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகள் தீவிரப் பின்னணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் கத்தார் தூதுக்குழுவினர் சமீபத்தில் டெஹ்ரானுக்குச் சென்று ஈரானிய அதிகாரிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாகவே இந்த இடைக்கால ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது. தற்போதைய பேச்சுவார்த்தை முற்றிலும் போரை நிறுத்துவதிலேயே கவனம் செலுத்துவதாகவும், அணுசக்தி விவகாரம் இதில் இப்போதைக்குச் சேர்க்கப்படவில்லை என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
