கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுடன் நடந்ததாகக் கூறப்படும் பிறந்தநாள் விழாவை தொடர்ந்து, போலீசார் நடத்திய திடீர் சோதனையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் நள்ளிரவில் ரிசார்ட்டை முற்றுகையிட்டு, விடியற்காலம் வரை தீவிர விசாரணை நடத்தினர்.

போதைப் பொருள் மயக்கத்தில் கலந்து கொண்ட சிலர் ஒழுங்கீன நடத்தையில் ஈடுபட்டதாகவும், இதற்கான கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இத்தகைய நிகழ்வுகளுக்கான அழைப்புகள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக அனுப்பப்பட்டதாகவும், மாணவர்கள், இளைஞர்கள், தனிமையில் இருப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதில் பங்கேற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நுழைவுக் கட்டணமாக ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை வசூலிக்கப்பட்டது. மேலும், உள்ளே நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு, ஒரு விழாவிலேயே ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலும் லாபம் ஈட்டப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதைப் பொருட்கள் விநியோகத்திற்கு தனிப்பட்ட புரோக்கர்கள் செயல்பட்டதாகவும், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பல்வேறு வகை உயர் ரக போதைப்பொருட்கள் இந்த நிகழ்வுகள் வழியாக சப்ளை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வில் சில உயர்பதவியிலான நபர்களும் தொடர்புடையிருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸ் கூறியுள்ளது. தொடர்புடையவர்களின் விவரங்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

போதைப் பொருட்கள் எவ்வாறு மற்றும் யார் மூலம் ரிசார்ட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். சோதனையின் போது பல லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களும் சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை:

சொகுசு கார்கள் – 2

வெளிநாட்டு உயர்தர மதுபான பாட்டில்கள் – 102

மார்பின் – 5 துண்டுகள்

கஞ்சா – 25 கிராம்

எல்எஸ்டி போதைப் பொருள்

எம்டிஎம்ஏ – 600 மில்லிகிராம்

மெத்தாம்பெட்டமின் – 1.100 மில்லிகிராம்

கஞ்சா ஆயில் – 6.30 மில்லி

ஓஜி போதைப் பொருள் – 5.100 மில்லி

கொக்கெயின் – 250 கிராம்

அதன் பிறகு அஞ்சுகிராமம் அருகே ரிசார்ட்டில் போதைப் பொருட்களுடன் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத விழா தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி 1. குலசேகரத்தைச் சேர்ந்த கோகுல் கிருஷ்ணன் (34)

2. அவரது மனைவி சவுமி (33)

3. கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த விதுன் (30)

4. கோகுல் கிருஷ்ணனின் சகோதரர் கோவிந்த் கிருஷ்ணா (27)

5. கோவாவைச் சேர்ந்த ஜெயராஜ் சிங் கவுடா (35)

6. பெங்களூருவைச் சேர்ந்த சையத் பர்ஷான் (35)

7. வாலன்ஸ் பால் (36)

8. ரிசார்ட் உரிமையாளர் ராஜு (64) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்கள், வெளிநாட்டு மதுபானங்கள், மற்றும் சட்டவிரோத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாரிடம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான தகவல்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. சிறையில் உள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பின் மேலும் சில நபர்களின் பெயர்கள் வெளியே வரக்கூடும் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

விசாரணையில், முக்கிய குற்றச்சாட்டுப்பேராண்மை கோகுல் கிருஷ்ணன் பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் பேரன் என்பதும், இது வழக்கை மேலும் முக்கியத்துவம் அடையச் செய்திருக்கிறது. அவரது மனைவி சவுமி மற்றும் தம்பி கோவிந்த் கிருஷ்ணா ஆகியோர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈவெண்ட் ஆர்கனைசர் நிறுவனத்தை நடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிறுவனம் வழியாக மாநிலம், மாவட்டம் மற்றும் வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். அதன் மூலம் போலீஸ் கண்காணிப்பு குறைவான பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகள், சொகுசு விடுதிகள் போன்றவற்றை சீசனுக்கு ஏற்ப ஒப்பந்தம் செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்ததாகவும் இதற்காக தனி கட்டணம் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.