ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது, நடிகர் விஜயின் அரசியல் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” என்று கடுமையாக விமர்சித்தார்.

மக்களை சந்திப்பது என்பது வெறும் ரோடு ஷோ நடத்துவதோ, கூட்டம் கூட்டி பேசிவிட்டு செல்வதோ அல்ல, மக்களின் பிரச்சனைகளுக்காக அவர்களோடு நின்று போராடுவதே உண்மையான சந்திப்பு என்று அவர் கூறினார்.

சீமான் மேலும் பேசுகையில், “மக்களோடு மக்களாக நிற்பவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வருபவன். நான் எந்த போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்திருக்கிறேன்? மக்கள் என்னை பார்க்க வரவில்லை, நான் அவர்களின் பிரச்சனைகளுக்காக அவர்களை சந்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.

விஜயின் அரசியல் நடவடிக்கைகளை வேடிக்கையாகவே பார்ப்பதாகவும், அது மக்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கமற்றது என்றும் சாடினார். இந்த பேட்டி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு, கவனத்தை ஈர்த்துள்ளது.