ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்த கேள்வி எழுந்தது. அதற்குப் பதிலளித்த தினகரன், யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்றும் தான் எப்போதும் உண்மையாகவும் நம்பிக்கையுடனும் பேசுபவர் என்றும், அமமுக கட்சி யாருக்கும் விருப்பு வெறுப்பு இன்றி செயல்படுவதாகவும் தெரிவித்தார். யாரைப் பார்த்தும் பொறாமை இல்லை என்றும் கட்சி தொடங்கும்போது ஒருவரை அண்ணன், தம்பி என்று சொல்லி, பின்னர் அவர்களைத் திட்டுவது அமமுகவுக்கு அறியாதது என்றும் விமர்சிப்பவர்களுக்கு மட்டும் விமர்சனம் கொடுப்பதாகவும் கூறினார்.
ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உண்டு. பிரபல நடிகர் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்துள்ளார். இதனால் மக்கள் மத்தியில் ஏற்படும் தாக்கமும் தேர்தலில் வரும் தாக்கமும் உண்டு. 2026-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல விஜய் உணர்வு ரீதியாக ஏற்படுத்துவார் என்று என் அனுபவத்தால் சொல்கிறேன். ஆனால், விஜயுடன் கூட்டணிக்குப் போவோமா என்றால், அதை நான் முடிவு செய்யவில்லை. அமமுக இப்போது சுதந்திரமாக உள்ளது. வெற்றி பெறும் கூட்டணியில் இடம் பெறுவோம். இதுதான் நம் நிலைப்பாடு என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
