தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தின் போது தெரிவித்த ஒரு கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், “உண்மையான காங்கிரஸ் எங்க பக்கம் தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டதுடன், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸை விமர்சிக்கும் வகையில் பேசியதாகத் தெரிகிறது. விஜய்யின் இந்த அதிரடி கருத்துக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், “மதச்சார்பற்ற கொள்கைகளுக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தேச அளவில் போராடி வருகிறது.

ஆனால், புதியதாகக் கட்சித் தொடங்கி இருக்கும் விஜய், வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல் தங்களுக்குப் பின்னால் தான் உண்மையான காங்கிரஸ் இருப்பதாகக் கூறுவது அபத்தமானது” எனச் சாடியுள்ளனர்.

ஏற்கனவே திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பல்வேறு விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஜய்யின் இந்த “உண்மையான காங்கிரஸ்” கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் இத்தகைய பேச்சு திமுக – காங்கிரஸ் கூட்டணியைச் சீண்டப் பார்ப்பதாகவும், இது தேர்தல் முடிவுகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் காங்கிரஸ் தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.