மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமிழக அரசியல் களம் சூடாகும் வகையில் பேசியுள்ளார். “தமிழகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஒரே கூட்டணி திமுக கூட்டணி மட்டும்தான்” என்று தெரிவித்த அவர், தமிழகத்திற்குப் பெரும் திட்டங்களை வழங்காத பிரதமர் மோடியை நோக்கித் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ‘மோடி அங்கிள்’ என்று விமர்சிப்பாரா என நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் விட்டுவைக்காத வன்னி அரசு, “எப்போதும் கையைத் தூக்கிப் பேசும் இன்னொருவரும் இது குறித்துப் பேச மாட்டார்” என மறைமுகமாகச் சாடினார். மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கத் தயங்கும் புதிய மற்றும் மாற்று அரசியல் சக்திகளை நோக்கி வன்னி அரசு வீசியுள்ள இந்தக் கேள்விகள், சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. “யாருக்கு யாரு அங்கிள்?” என நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்க்க, வன்னி அரசின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
