தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்ட ஒரு நிகழ்வின்போது, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகி செய்த செயல் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிப்பதற்காக முக்கியமான இடத்தில் அமர வேண்டிய சூழலில், “அண்ணே நீங்க உட்காருங்க.. இல்ல தம்பி நீங்க உட்காருங்க” என ஒருவருக்கொருவர் இடத்தைக் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். இது அப்படியே ‘கல்லூரி’ திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற காமெடி காட்சியை நினைவுபடுத்தும் விதமாக அமைந்தது.

​யார் முன்னால் அமர்ந்து பேட்டி கொடுப்பது என்பதில் ஏற்பட்ட இந்தக் குழப்பமும், ஒருவருக்கொருவர் காட்டிய அதீத மரியாதையும் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தச் சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து எக்ஸ் (X) தளத்தில் பகிர, அது இப்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “தளபதி கட்சி நிர்வாகிகள் நிஜமாவே ரொம்ப பாசக்காரங்கப்பா” என்றும், “இது மரியாதையா இல்ல பயமா?” என்றும் நெட்டிசன்கள் தங்களுக்குத் தோன்றும் கமெண்டுகளைத் தட்டி விட்டு வருகின்றனர்.