திருச்சியில் நடைபெற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை திருச்சி வந்தடைந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பிரதமர் மோடியின் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தம்பி கொஞ்சம் தள்ளுங்க, இப்பதான் நான் வர்றேன். அப்புறமா பேசிக்கலாம்,” என மென்மையாகக் கூறிவிட்டு நகர முயன்றார்.

ஆனாலும் செய்தியாளர்கள் விடாமல், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நடிகர் விஜய் இணையப்போவதாகத் தகவல் வெளியாகிறதே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கினர்.

இதைக் கேட்டு தனது வழக்கமான பாணியில் சிரித்துக்கொண்டே பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், என்னை ஏதாவது பேசி மாட்டிவிட்டு, கட்சியிலிருந்து நீக்கப் பார்க்கிறீர்களா?” என்று கலகலப்பாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். செய்தியாளர்களின் கிடுக்கிப்பிடி கேள்விக்கு அவர் அளித்த இந்தச் சமயோசிதமான மற்றும் நகைச்சுவையான பதில் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.