தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), அதிமுகவுடன் கைகோர்க்கப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பலத்த பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் இன்று (மார்ச் 11) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் ‘லகலக்க’ நாயகன் செல்லூர் ராஜு, இந்த விவகாரம் குறித்து தனது பாணியில் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “விஜய் அதிமுக கூட்டணியில் இணையப்போவதாகச் செய்திகளில் பார்த்தேன், அரசியலில் கடைசி நேரத்தில் கூட காட்சிகள் மாறலாம்” என ஒரு போடு போட்டுள்ளார்.

​தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவைப் பொறுத்தவரை தோழமை கட்சிகளைத் தோளில் வைத்துத் தாங்குவோம், அவர்களைக் கொண்டாடுவோம்” என்று விஜய்க்கு பகிரங்கமாகவே அழைப்பு விடுத்துள்ளார். “விஜய் மட்டுமல்ல, யார் எங்களுடன் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை நாங்கள் இன்முகத்தோடு வரவேற்போம்” என்று அவர் கூறியிருப்பது, வரும் தேர்தலில் அதிமுக ஒரு மெகா கூட்டணியை அமைக்கத் தயாராகி வருவதையே காட்டுகிறது. செல்லூர் ராஜுவின் இந்த ‘ஓபன் ஸ்டேட்மெண்ட்’ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.