நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திட்டமிட்டபடி நேற்று வெளியாகாததும், தணிக்கை வாரியத்தின் பிடிவாதத்தால் தள்ளிப்போனதும் கோலிவுட் முதல் கோட்டை வரை பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பொங்கல் ரேசில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் தலைவிதி வரும் 21-ஆம் தேதி நீதிமன்றத்தின் கைகளில் உள்ளதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த விவகாரம் இப்போது ஒரு சினிமா பிரச்சனையாக இல்லாமல், நேரடி அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கண்டனத்தை மிகக் கடுமையாகப் பதிவு செய்துள்ளார். சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகளைத் தனது அரசியல் எதிரிகளை ஒடுக்க ஒன்றிய அரசு பயன்படுத்துவதைப் போல, தற்போது ‘சென்சார் போர்டையும்’ (தணிக்கை வாரியம்) ஒரு புதிய ஆயுதமாக கையில் எடுத்துள்ளதாக அவர் சாடியுள்ளார். ஒரு படைப்புச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தணிக்கை வாரியம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என அவர் பதிவிட்டுள்ளது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
