தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், பிரபல நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா தாக்கல் செய்துள்ள 12 பக்க மனுவில், தங்களது 27 கால திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களை விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். அதில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும், அது தனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தட்டிக் கேட்டபோது, விஜய் தனக்கு பொருளாதார ரீதியாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். வழக்கறிஞர்கள் மூலம் பேசியபோது அந்தத் தொடர்பைத் துண்டிப்பதாகக் கூறிய விஜய், வாக்குறுதியை மீறி அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்குச் செல்வதும், பொது இடங்களில் தோன்றுவதும் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த நடிகை தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடும்போது அதற்கு தன்னுடைய கணவர் எதிர்ப்பு தெரிவிக்காததாகவும் இது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் சங்கீதா கூறிய நிலையில் இதுகுறித்து தட்டி கேட்டபோது வார்த்தைகளால் தன்னை அவமானப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதே நேரத்தில் தேவைப்பட்டால் இந்த வழக்கில் அந்த நடிகையை இரண்டாவது எதிர்மனுதாரராக சேர்ப்பேன் எனவும் அவருக்கும் என் கணவனுக்கும் இடையே உள்ள தொடர்புகளுக்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் வெளியிடுவேன் எனவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 9-ஆம் தேதி சுமுகமாகப் பிரிய எடுத்த முயற்சிக்கு விஜய் ஒத்துழைக்கவில்லை என்றும், இதனால் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள சங்கீதா, தற்போதைக்கு அந்த நடிகையின் பெயரை வெளியிடவில்லை என்றும், நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த விஜய் அதை நான் கண்டுபிடித்த போது விலகுவதாக கூறிய நிலையில் தொடர்ந்து அந்த உறவில் இருந்தார். இதை நான் தட்டி கேட்டதால் 2021 ஆம் ஆண்டிலேயே என்னை தனியாக வாழுமாளு நிர்பந்தித்தார். அதிலிருந்தே நாங்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். மேலும் நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக கூறிய விஜய் திருந்தாததால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தனக்கு அவர் துரோகம் செய்துவிட்டதாகவும் விவாகரத்து மனதில் பல குற்றச்சாட்டுகளை விஜயின் மீது முன் வைத்துள்ளார் சங்கீதா.
