தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், பிரபல நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா தாக்கல் செய்துள்ள 12 பக்க மனுவில், தங்களது 27 கால திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களை விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.  அதில்  கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும், அது தனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தட்டிக் கேட்டபோது, விஜய் தனக்கு பொருளாதார ரீதியாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். வழக்கறிஞர்கள் மூலம் பேசியபோது அந்தத் தொடர்பைத் துண்டிப்பதாகக் கூறிய விஜய், வாக்குறுதியை மீறி அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்குச் செல்வதும், பொது இடங்களில் தோன்றுவதும் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த நடிகை தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடும்போது அதற்கு தன்னுடைய கணவர் எதிர்ப்பு தெரிவிக்காததாகவும் இது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் சங்கீதா கூறிய நிலையில் இதுகுறித்து தட்டி கேட்டபோது வார்த்தைகளால் தன்னை அவமானப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதே நேரத்தில் தேவைப்பட்டால் இந்த வழக்கில் அந்த நடிகையை இரண்டாவது எதிர்மனுதாரராக சேர்ப்பேன் எனவும் அவருக்கும் என் கணவனுக்கும் இடையே உள்ள தொடர்புகளுக்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் வெளியிடுவேன் எனவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 9-ஆம் தேதி சுமுகமாகப் பிரிய எடுத்த முயற்சிக்கு விஜய் ஒத்துழைக்கவில்லை என்றும், இதனால் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள சங்கீதா, தற்போதைக்கு அந்த நடிகையின் பெயரை வெளியிடவில்லை என்றும், நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளார். மேலும், இந்த வழக்கின் தீவிரத்தன்மை கருதி தனி  அறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு திருமணமான இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் மார்ச் 20-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் விஜய்யும் சங்கீதாவும் நேரில் ஆஜராக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.