தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் முன்வைத்த சில கேள்விகள் மிகவும் நியாயமானவை என தமிழிசை சௌந்தரராஜன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, “நீட் விலக்கு கொண்டு வருவோம் என்று சொன்னீர்களே என்ன ஆனது? சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவோம் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆனது?” என விஜய் கேட்ட கேள்விகளைத் தமிழிசை வழிமொழிந்துள்ளார். மாநில அரசால் நிறைவேற்றவே முடியாத திட்டங்களைச் செய்வோம் என்று கூறி, தேர்தலின் போது திமுக பொய் வாக்குறுதிகளைக் கொடுத்ததை விஜய் மிகச் சரியாகத் தோலுரித்துக் காட்டியுள்ளதாகத் தமிழிசை ஆவேசமாகத் தெரிவித்தார்.
விஜய்யின் கேள்விகள் திமுகவிற்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆளுங்கட்சியின் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் எவருக்கும் தனது ஆதரவு உண்டு என்பதையும் மறைமுகமாக உணர்த்தியுள்ளார். இதுவரை விஜய்யின் அரசியல் வருகையைத் விமர்சித்து வந்த தமிழிசை, இப்போது திமுகவை எதிர்க்க விஜய்யின் கேள்விகளையே ஆயுதமாகப் பயன்படுத்தியிருப்பது 2026 தேர்தல் களத்தில் ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற புதிய அரசியல் சூத்திரத்தை உருவாக்கியுள்ளது.
