அதிமுகவை ஊழல் கட்சி என்றும், பாஜகவின் அடிமை என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இதற்கு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், “கரூரில் 41 உயிர்கள் பறிபோன போது, பாதிக்கப்பட்ட மக்களை விஜய் ஏன் நேரில் சென்று சந்திக்கவில்லை? 41 குடும்பங்களை அனாதையாக்கி விட்டு இப்போது தலைவர் என்று பேசுகிறார். இவரெல்லாம் ஒரு தலைவரா?” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று கூறிய இபிஎஸ், அரசியல் என்பது வெறும் நடிப்பல்ல, அதில் அனுபவம் மிக முக்கியம் என்று சுட்டிக்காட்டினார்.

“அரசியல் செய்ய வேண்டும் என்றால் மக்களுடன் நேரடி தொடர்பு இருக்க வேண்டும். எதையோ விட்டுவிட்டு வந்ததாகச் சொல்லும் விஜய், உண்மையில் மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளார்?” என்றும் அவர் வினவினார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து இதுவரை மவுனம் காத்து வந்த எடப்பாடி பழனிசாமி, முதல்முறையாக அவரை இவ்வளவு கடுமையாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.