அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நடிகர் விஜய் தொடங்கியுள்ள த.வெ.க. குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது:

“தி.மு.க. தீய கட்சி என்றும், த.வெ.க. தூய்மையான கட்சி என்றும் விஜய் கூறுகிறார். ஆனால் த.வெ.க. எப்படி தூய்மையான கட்சியாக இருக்க முடியும். அந்த கட்சி இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. ஆட்சிக்கு வந்தால் எந்த திட்டங்களை கொண்டு வருவார்கள், அவற்றை ஒழுக்கமாக நிறைவேற்றுவார்களா என்பது குறித்து எதுவும் தெரியாது.

விஜய் தனது கட்சியை தொடங்கியபோது, ரசிகர்களுடன் மட்டும் இருந்திருந்தால் ஒரு தனித்தன்மை உள்ள அரசியல் இயக்கம் என்று கூறியிருக்கலாம். ஆனால் தற்போது பல்வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் அவருடன் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள். எங்கு எளிதாக பதவி கிடைக்கும், அடுத்த தேர்தலில் எப்படிப் பதவிக்கு வரலாம் என்பதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

அ.தி.மு.க.வில் உடனடியாக பதவி கிடைப்பதில்லை. உழைப்பவர்களுக்கு மட்டுமே உயர்வு கிடைக்கும் கட்சி இது. அதனால்தான் கிராமப்புறத்தில் இருந்து வந்த சாதாரண தொண்டராக இருந்த எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார். இங்கு இருப்பவர்கள் உழைப்பாளிகள். ஆனால் அங்குச் சென்றவர்கள் சந்தர்ப்பவாதிகள்.

அதேபோல், அ.தி.மு.க.வில் 53 ஆண்டுகள் இருந்த செங்கோட்டையன், அனைத்து பதவி சுகத்தையும் அனுபவித்த பிறகு அந்த கட்சிக்கு சென்றுள்ளார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்ததாக புரட்சித் தளபதி விஜய் என்று கூறுவது வெட்கக்கேடானது. இத்தகைய கலவையான மக்கள் இருப்பதால், அது தூய்மை கட்சி அல்ல; கலப்பட கட்சி. எங்கு வாய்ப்பு கிடைக்குமோ அங்கு செல்லும் கூட்டம் விஜய்யுடன் உள்ளது. விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாளை அவரையும் விட்டு விட்டு வேறு இடத்திற்கு அவர்கள் செல்லக்கூடும்” என்றார்.