அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருநெல்வேலியில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு வருகை தந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற தனது முடிவை மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.

“நான் போட்டியிடவில்லை என்றாலும், தகுதியான தொண்டர்களைச் சட்டமன்ற உறுப்பினர்களாக்கி அழகு பார்ப்பேன்; கடந்த முறை நாங்குநேரி தொகுதியில் அமமுக 40 ஆயிரம் வாக்குகளைப் பெற்றதை யாரும் மறந்துவிடக் கூடாது” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், திமுக கூட்டணியில் நிலவும் குழப்பங்களை விமர்சித்த அவர், காங்கிரஸின் மிரட்டலைச் சமாளிக்க முடியாமல் திமுக திணறி வருவதாகவும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் அச்சமடைந்துள்ளதாகவும் அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாளுக்கு நாள் பலம் பெற்று வருவதாகவும், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் பெரும் வேதனையில் இருப்பதாகவும் தினகரன் சாடினார்.