பீகார் மாநிலம் பாட்னாவின் தீபா பகுதியில் ‘மா வைஷ்ணோ’ என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு பிற்பகலில் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு இரண்டு சிறுமிகள் வந்துள்ளனர். அவர்கள் சாதாரண வாடிக்கையாளர்களைப் போல நடித்து, கடையின் உரிமையாளர் ராஜேஷ் குமாரிடம் தங்கக் காதணிகளை  காட்டுமாறு கேட்டுள்ளனர். உரிமையாளர் ராஜேஷ் குமார் நகைகளை வெளியே எடுத்து காண்பித்தபோது, எதிர்பாராத விதமாக அந்த சிறுமிகளில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த மிளகு ஸ்ப்ரே  பாட்டிலை எடுத்து உரிமையாளரின் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய உரிமையாளருக்கு கண்களில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

Two girls tried robbing a jewellery shop in Digha, Patna with pepper spray. Owner dodged it, raised alarm, neighbours caught them on spot. CCTV captured the fail😭 pic.twitter.com/LfTXphRqBb

— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 13, 2026

இருப்பினும், அந்த இக்கட்டான சூழலிலும் சாமர்த்தியமாக செயல்பட்ட கடை உரிமையாளர் ராஜேஷ் குமார், உடனடியாக அருகில் இருந்த நீரை எடுத்து முகத்தைக் கழுவிக்கொண்டார். பின்னர் மின்னல் வேகத்தில் கடையை விட்டு வெளியே ஓடிவந்து, கடையின் ஷட்டரை கீழே இழுத்து பூட்டினார். இதனால் கொள்ளையடிக்க முயன்ற இரண்டு சிறுமிகளும் கடைக்குள்ளேயே மாட்டிக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாட்னா காவல்துறையினர், கடையின் ஷட்டரை திறந்து உள்ளே புகுந்து, மாட்டிக்கொண்ட இரு சிறுமிகளையும் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.