தலைநகர் சென்னையில் ஆவின் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பால் விற்பனையான 14.75 லட்சம் லிட்டரில், சுமார் 50 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ‘பச்சை நிற கிரீன் மேஜிக்’ பாக்கெட் பாலின் விற்பனையைத் தவெக அரசு குறைத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், “கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை” எனத் தவெக அரசு செய்தி வெளியீடு மூலம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்திற்குத் தனது ‘எக்ஸ்’ வலைத்தளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் தலைவர் அண்ணாமலை, “தவெக அரசு யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது? விற்பனை குறைக்கப்படவில்லை என்றால், தற்போது ஆவின் மையங்களில் முன்பு போல ஏன் இந்தப் பால் பாக்கெட்டுகள் கிடைப்பதில்லை?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிர்வாகத்தின் தவறான முடிவுகளால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, அதிகக் கொழுப்புச் சத்து கொண்ட ‘ஆரஞ்சு நிற’ பாக்கெட் பாலின் விலையை விட, ‘பச்சை நிற’ பாக்கெட் பாலின் விலை குறைவாக இருப்பதால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் இதனையே அதிகம் நம்பியுள்ளனர். ஆனால், தவெக அரசு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பச்சை நிறப் பாலின் விநியோகத்தை திட்டமிட்டு முடக்கிவிட்டு, அதிக விலை கொண்ட ஆரஞ்சு நிறப் பாலை வாங்க மக்களைக் கட்டாயப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, அரசு கேபிள்களில் செய்தி சேனல்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தொழில்நுட்பக் கோளாறு என்று சாக்குப்போக்கு கூறியதைப் போல, ஆவின் விவகாரத்திலும் பொய்ப் பிரச்சாரங்களைச் செய்யாமல், மக்களுக்குத் தடையின்றிப் பால் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
