தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தஞ்சாவூர் அருகே நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகப் பயணம் மேற்கொண்டார். இதையறிந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், தங்களின் அபிமான தலைவரைப் பார்க்கும் ஆர்வத்தில் வழிநெடுகிலும் திரண்டிருந்தனர்.

இது குறிப்பாக, செங்கிப்பட்டி நோக்கிச் சென்ற விஜய்யின் வாகனத்தைத் தொண்டர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் பின்தொடர்ந்து சென்றனர். இந்த ஆர்வ மிகுதியால் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அடுத்தடுத்துப் பல இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்துகளில் சிக்கிய இளைஞர்களில் ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஏற்கனவே “தன்னைப் பின்தொடர்ந்து வாகனங்களில் வர வேண்டாம்” என்று விஜய் தனது தொண்டர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதையும் மீறி நடந்த இந்த விபத்துச் சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.