தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் அரசியல் அனுபவம் இல்லை என்றும், மக்கள் அவர்களை முதல்வராக ஏற்க மாட்டார்கள் என்றும் நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தற்போது உடல்நலம் சரியில்லை என்று சாக்குச் சொல்லிவிட்டு பிரசாரத்தில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். விஜய்யிடம் பேச எதுவுமில்லை. அவரிடம் காட்டுவதற்கு ‘ரிப்போர்ட் கார்டு’ கூட இல்லை. இருவரும் ஒரே மாதிரியான அரசியலையே செய்கிறார்கள்.

இருவரும் நேரடியாக முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள். ஆனால், முதலமைச்சர் பதவிக்கு வர வேண்டுமென்றால் படிப்படியாக உழைக்க வேண்டும். இவர்களை மக்கள் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விஜய்க்குப் போதுமான அரசியல் அனுபவம் கிடையாது.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனாவை யாரும் நம்பப் போவதில்லை. அவர் யாருக்காக வேலை செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ‘ஜனநாயகன்’ என்ற படத்தை அவரே கூட வெளியிட்டிருக்கலாம். அதன் மூலம் வாக்குகள் கிடைக்கும் என அவர் நினைக்கலாம். ஆனால், படத்தைப் பார்த்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். சிரஞ்சீவி கூட்டத்திற்கு வந்தது போல, இவர்களைப் பார்க்கக் கூட்டம் வரலாம். ஆனால் அந்தக் கூட்டம் வாக்குகளாக மாறாது. ஆதவ் அர்ஜுனா முதலில் தேர்தலில் வெற்றி பெற்று வந்து பேச வேண்டும். இது போன்ற மலிவான அரசியலைச் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.