தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பாராட்டிப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் தமிழகத்தில் பாஜக இன்று பட்டிதொட்டியெங்கும் வளர்ந்து நிற்பதற்கு அண்ணாமலையின் அயராத உழைப்பும், சிறப்பான பணியுமே முக்கியக் காரணம் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது சிங்கத்தைப் போலவும், எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தவர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் தமிழக அமைச்சர்கள் மத்தியில் அண்ணாமலையின் செயல்பாடுகள் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாகக் குறிப்பிட்ட செல்லூர் ராஜு, “நாளை அண்ணாமலை என்ன அறிக்கை விடுப்பாரோ, என்ன பேட்டி கொடுப்பாரோ என்று அமைச்சர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கும் சூழலை அவர் உருவாக்கினார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் முக்குலத்தோர் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள நிலையில், அண்ணாமலையின் ஆதரவுடன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள செல்லூர் ராஜுவின் இந்தப் பேச்சு, அதிமுக-பாஜக இடையிலான தேர்தல் கால உறவையும் அண்ணாமலையின் அரசியல் தாக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
