2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், அக்கட்சிக்கு ‘விசில்’ சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

விஜய்க்குப் பிடித்தமான சின்னம் கிடைத்துள்ளதால் தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், விஜய்யின் அரசியல் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘ஜனநாயகன்’ படத்திற்குச் சென்சார் போர்டு தடை விதித்ததற்கு திமுகதான் காரணம் என்று கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும், சென்சார் போர்டுக்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜகவை எதிர்த்து ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் விஜய் ஏன் அஞ்சுகிறார் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் தேர்தலே வராத நிலையில், அதற்குள் இப்படிப் பயந்தால் எதிர்காலத்தில் எப்படி அரசியல் செய்யப் போகிறீர்கள் என்றும், எதிர்த்துப் பேச விஜய்க்குத் துணிச்சல் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

அதேபோல் அதிமுக குறித்தும் பேசிய திருமாவளவன், எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்குத் துணை போவதாகவும், ஜெயலலிதா எடுத்த உறுதியான முடிவுகளை அதிமுக மறந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விமர்சனங்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.