தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-இன் மக்கள் தொடர்புப் பிரிவில் (PR) பணியாற்றி வந்த செல்வக்குமார், தற்போது அவரிடமிருந்து விலகிச் சென்று திமுகவில் இணைந்திருக்கும் நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று எக்ஸ் தளத்தில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் பெரிய அளவில் இல்லாததால், நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாகத்தான் நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக முடியும் என்ற உண்மையைப் பயன்படுத்தி, விஜய்யை முன்னிறுத்தத் தான் பிரத்யேகமாக ஒன்பது பத்திரிகைகளை நடத்தியதாக செல்வக்குமார் கூறியுள்ளார்.

​’என்றென்றும் விஜய்’, ‘அன்புடன் விஜய்’, ‘தளபதி விஜய்’, ‘பிரியமுடன் விஜய்’ உட்பட மொத்தம் ஒன்பது பத்திரிகைகளை நடத்தியதாகவும், அவற்றில் விஜய்யின் நல்ல குணங்கள், அவரின் திட்டங்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விஜய்க்கு மக்கள் மத்தியில் இருக்கும் பாசத்தை ஆழமாகப் பதியவைக்க, அவரின் தங்கை வித்யா பற்றிய மிகவும் நெகிழ்ச்சியான வசனமான, “வித்யா புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்; ஒவ்வொரு வீட்டிலிருக்கும் பெண்களையும் நான் தங்கையாகப் பார்க்கிறேன்” என்ற வசனத்தைக்கூடத் தான் எழுதிக் கொடுத்ததாகவும் செல்வக்குமார் இந்தப் பேட்டியில் கூறியிருப்பது, அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.